Latestஉலகம்மலேசியா

மியன்மார் இராணுவ ஆட்சியாளருடனான சந்திப்பு வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது; பிரதமர் அன்வார் தகவல்

பேங்கோக், ஏப்ரல்-18, தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அங்கு மியன்மார் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் மின் ஆங் ஹிலாய்ங்குடன் (Min Aung Hlaing) சந்திப்பு நடத்தினார்.

நேற்று பேங்கோக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் 1 மணி நேரத்திற்கு அச்சந்திப்பு நீடித்தது.

ஆசியான் தலைவர் என்ற முறையில், அண்மையில் மியன்மாரை உலுக்கிய நில நடுக்கப் பாதிப்புகள் குறித்து அதன் போது முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

ஆசியான் தலைவரின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகரும் தாய்லாந்து முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினாவாட்டும் அச்சந்திப்பில் உடனிருந்தார்.

மியன்மாருக்குத் தேவைப்படும் உடனடி மனிதநேய உதவிகள் குறித்த அச்சந்திப்பு ‘வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும்’ அமைந்ததாக டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.

குறிப்பாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக field hospital எனப்படும் கள மருத்துவமனை அமைப்பது, அந்நாட்டை மீண்டும் வழக்க நிலைக்குக் கொண்டுச் செல்லும் முயற்சி குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.

இயற்கைப் பேரிடருக்கு மத்தியில் 4,800 கைதிகளை மியன்மார் இராணுவ அரசு விடுவித்திருப்பதையும் பிரதமர் வரவேற்றார்.

அந்நடவடிக்கை, பதட்டத்தைத் தணிக்க உதவியிருப்பதோடு, நிலைத்தன்மைமிக்க மியன்மாரை நோக்கிப் பயணப்படும் நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

மியன்மார் இராணுவ அரசுடன் ஒத்துழைக்க 5-அம்ச ஒருமித்த கருத்து முக்கியமென்ற ஆசியானின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை; என்றாலும் மனிதநேய அடிப்படையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றதாக டத்தோ ஸ்ரீ அன்வார் விளக்கினார்.

அண்மைய நில நடுகத்தில் ஆயிரக்கணக்கான மியன்மாரியர்கள் கொல்லப்பட்டனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!