
ரந்தாவ் பஞ்சாங், டிச 9 – ரந்தாவ் பஞ்சாங்கில் சுங்கை கோலோக் ஆற்றில் சட்டவிரோத தளங்களை பயன்படுத்தி எல்லைப் பகுதிகளை கடப்பதற்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு நிலைமை அமைதியாக காணப்படுகிறது. இதற்கு முன் சுங்கை கோலோக் ஆற்றின் சட்டவிரோத தளங்கள் மூலம் எல்லை பகுதிகளை கடக்கும் நடவடிக்கைகள் அதிகமாக இருந்ததால் தாய்லாந்தில் கோலோக் பகுதியிலுள்ள படகுகள் மற்றும் ரந்தாவ் பஞ்சாங்கில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் அந்த சட்டவிரோத பகுதிகளை பயன்படுத்தியதால் நிலைமை எப்போதும் பரபரப்பாக இருந்து வந்தது.
இதற்கு முன் மாணவர்கள் பயன்படுத்திய பல சட்டவிரோத தளங்களில் காலை 6.45 முதல் 7.30 வரையில் மேற்கொள்ளப்பட்டஆய்வில் எந்த நடமாட்டமும் இல்லை என்று கண்டறியப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் குடிநுழைவு , சுங்கத்துறை, தனிமைப்படுத்தும் மையம் மற்றும் பாதுகாப்பு வளாகத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்களில் சிலர் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கின்றனர்.
காலை 7 மணியளவில், ICQS வளாகம் திறக்கப்பட்டவுடன், மாணவர்கள் கால் நடையாகவும் ,சிலர் தங்களது பெற்றோர் மற்றும் நண்பர்களின் மோட்டார் சைக்கிள்களிலும் ரந்தாவ் பஞ்சாங்கில் நுழைவதைக் காண முடிந்தது.