
கோலாலாம்பூர், அக்டோபர்-1,
கோலாலாம்பூர் பிரிக்ஃபீல்ஸ்ட் லிட்டில் இந்தியா சாலையில் தீபாவளி விற்பனை கூடாரங்கள் குறித்து நேற்று டத்தோ ஸ்ரீ எம். சரவணன் விடுத்த எச்சரிக்கை, ஒரே நாளில் உண்மையாகிப் போனது.
இன்று காலை அங்கு வீசிய பலத்த காற்றில், கூடாரங்கள் பிய்த்துக் கொண்டு பறந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.
பறந்தவற்றை, DBKL பணியாளர்கள் ஓடிப் பிடித்ததும், மீண்டும் சரி செய்வதும் வீடியோக்களில் தெரிந்தது.
ஏற்கனவே நெரிசலான சாலையை மறைத்துக் கொண்டு, கூடாரங்களைப் போட்டு நிலைமையை மோசமாக்கியது ஏன் என, நேற்று தான் அந்த ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கூடாரங்கள் வலுவானவையாக இல்லை, பலத்த காற்றடித்தாலே பறந்துபோய் விடுமென்றும் அவர் எச்சரித்த நிலையில், இன்று அது பலித்துள்ளது.
கூடாரங்களைப் போட்டு நெரிசலை உண்டாக்கினால், வாடிக்கையாளர்கள் நிச்சயம் அந்த கடை வீதிக்குள் வர மாட்டார்கள் என அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், தமது எச்சரிக்கயைத் துச்சமாக நினைத்தவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என சரவணன் கேள்வி கேட்டார்.