
கிள்ளான், ஜூன்-17 – சிலாங்கூர், கிள்ளான் கம்போங் ஜாவாவில் WCE எனப்படும் மேற்குக் கரை நெடுஞ்சாலை நிர்மாணிப்புத் திட்டத்திற்கான நில கையப்படுத்தலில், குடியிருப்பாளர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.
11113 லாட் நிலங்களுக்கு சந்தை விலைகளுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படவில்லை என, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
அதோடு தாங்கள் தொடுத்துள்ள வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருந்தாலும், WCE தங்களின் சொத்துக்களை இடிக்க முயலுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அச்செய்தியாளர் சந்திப்பில், MIPP கட்சியின் தேசிய தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ சத்தேஷ் குமார், சிலாங்கூர் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் Mohd Yusof Abullah, கெராக்கான் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் Teoh Chin Wan, பாஸ் கட்சி ஆதரவாளர் மன்றத்தின் உதவித் தலைவர் திபாகரன் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியிருப்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லையென ஏமாற்றம் தெரிவித்த உமாகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாதது குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.
குறிப்பாக உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளே எட்டிப் பார்ப்பதில்லை என்றார் அவர்.
எனவே, சிறப்புக் குழு அமைத்து அரசாங்கம் இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமென உமாகாந்தன் கேட்டுக் கொண்டார்.
பணக்கார மேம்பாட்டாளர்களுடன் கைக்கோர்ப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை உறுதிச் செய்ய, அரசாங்கம் அவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என அவர் சொன்னார்.
இவ்வேளையில், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, வீடுகளை விட்டு வெளியேறுமாறு தாங்கள் கட்டாயப்படுத்தப்படுவதும், கைகலப்பு வரை செல்லும் அளவுக்கு பிரச்னையில் ஈடுபடுவதும் வேதனையளிப்பதாக, குடியிருப்பாளர்களில் ஒருவரான சந்திரகுமார் சுப்ரமணியம் கூறினார்.
ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி, குத்தகையாளரால் தாக்கப்பட்டுள்ளார்; ஆனால் இதுவரை போலீஸிடமிருந்து முறையான பதிலில்லை என பாதிக்கப்பட்ட செல்வேந்திரன் முனியாண்டி கூறினார்.
வீடுகளை விட்டு வெளியேற வேண்டுமென்றும், இல்லையென்றால் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுமென்றும் இரவு நேரங்களில் வெளிநாட்டினர் மிரட்டப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கம்போங் ஜாவா மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலுவதாக் கூறப்படுவதில் உண்மையில்லை என, WCE நிர்வாகம் முன்னதாக கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.