Latestமலேசியா

கல்வியால் மட்டுமே இந்தியர்கள் முன்னேற முடியும் – விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், நவ 18 – இந்நாட்டில் கல்வியால் மட்டுமே இந்தியர்கள் முன்னேற முடியும். இதனை அடிப்படையாக கொண்டுதான் ம.இ.காவின் முன்னாள் தேசிய தலைவரான துன் சாமிவேலு ம.இ.கா மூலம் இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காக அயராமல் பாடுபட்டார். அவரது அந்த அடிச்சுவட்டை பின்பற்றி ம.இ.கா தலைமைத்துவம் தொடர்ந்து கல்விக்காக முன்னுரிமை வழங்கி வருவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்திய சமூகத்தில் மேலும் அதிகமானோர் பட்டதாரிகளாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது ம.இ.கா உறுப்பினர் அல்லாதாரின் பிள்ளைகளுக்கும் எம்.ஐ.இ.டி கல்வி கரத்தின் மூலம் உதவி கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருப்பதாக ம.இ.காவின் 77ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் கொள்கையுரை ஆற்றியபோது விக்னேஸ்வரன் கூறினார்.

ம.இ.காவின் உதவியின் மூலம் இதுவரை 45,000த்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டதாரிகளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தூர நோக்கு சிந்தனையுடன் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை ம.இ.கா அமைத்தது கட்சிக்கு நல்லதொரு தோற்றத்தையும் பெருமையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் அரசாங்க பல்கலைக்கழங்களில் இடம் கிடைக்காத இந்திய சமூகத்தை சேர்ந்த பல மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வி வாய்ப்புகளை பெறுவதற்கும் ம.இகா உதவியுள்ளது.

இந்திய சமூகத்திற்காக மேலும் சிறந்த சேவையை வழங்குவதற்காக புதிய கல்லூரி மற்றும் ஏய்ம்ஸ்ட் மருத்துவமனையை ம.இ.கா அமைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2001 ஆம் ஆண்டிலிருந்து கெடாவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் செயல்பட்டு வரும் நிலையில் விரைவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனை நிறுவப்படவுள்ளது. அதோடு சிலாங்கூரில் அடுத்த ஆண்டு ம.இ.கா மேலும் ஒரு கல்லூரியை தொடங்கவிருப்பதாகவும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழங்காத இதர கல்வித்துறைகளுக்கான பட்டப் படிப்பு அந்த புதிய கல்லூரி வழங்கும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதனிடையே அடுத்த ஆண்டு முதல் MIED மூலம் தமிழ்ப் பள்ளி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்துவதற்கு ஆதரவு அளிப்பது என்றும் கட்சி முடிவு செய்துள்ளது என்றார் விக்னேஸ்வரன்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!