
கோலாலம்பூர், ஏப்ரல்-14, கோலாலம்பூர், கெப்போங் பாருவில் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அடுத்து, போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DAP-யைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த வட்டி முதலையிடம் வேலை செய்வதாக நம்பப்படும் உள்ளூர்வாசி ஒருவரால், வாடகைக்கு விடப்பட்ட தன் வீடு குறி வைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து புகார் பெற்றதாக, கெப்போங் எம்.பியான அவர் சொன்னார்.
பெட்ரோல் குண்டை வீசியவர் அச்செயலைப் பதிவுசெய்து, வீடியோவை பாதிக்கப்பட்டவருக்கு அனுப்பியுள்ளார்; கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் தினசரி துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
வைரலான 8 வினாடி வீடியோவில், தாக்குதல் நடத்தியவர் ஒரு வீட்டின் முன் வாயிலில் ஒரு குறிப்பை வைத்துவிட்டு, பின்னர் ஒரு பொருளை தீ வைத்து வீட்டு வளாகத்திற்குள் வீசுவது தெரிகிறது.
பின்னர் சந்தேக நபர் ஒரு வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது வெறும் அச்சுறுத்தல் மட்டுமல்ல; பொது மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்; தவிர, சட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு சமமாகும் என லிம் லிம் எங் கூறினார்.
கோலாலம்பூர் குண்டர்கள் அல்லது எல்லை தாண்டிய வட்டி முதலைகளின் விளையாட்டு மைதானமாக மாறக்கூடாது; அதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்த அதிகாரிகள் தாமதமின்றி செயல்பட வேண்டும் என்றார் அவர்.