
கோலாலம்பூர், ஏப்ரல்-8, MRSM எனப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரியின் 7 மாணவர்கள் கல்லூரி படிப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சம்பந்தப்பட்ட பகடிவதை சம்பவ வீடியோ வைரலானதை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
MRSM கட்டொழுங்கு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் அவர்கள் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டதாக, மாரா தலைவர் டத்தோ Dr அஷ்ரஃப் வஜ்டி டுசுகி தெரிவித்தார்.
அந்த எழுவருமே அந்த பகடிவதை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்; அவர்களில் இருவர், பாதிக்கப்பட்ட மாணவனை உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
மற்ற ஐவரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர் என தனது facebook பதிவில் அவர் குறிப்பிட்டார்.
MRSM கல்லூரியின் தங்கும் விடுதியில் சக மாணவனை அவர்கள் பகடிவதை செய்யும் 1 நிமிடம் 31 வினாடி காணொலி முன்னதாக வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஆண் மாணவர்கள் சிலர், படுக்கையில் முகம் குப்புறக் கிடந்த மற்றொரு மாணவரின் தலை மற்றும் உடலை இறுக்கிப் பிடிப்பதையும், முதுகில் வார்ப்பட்டையால் அடிப்பதும் அவ்வீடியோவில் தெரிந்தது.
அச்செயல் ஒரு குறும்புக்காகச் செய்யப்பட்டதா அல்லது உண்மையிலேயே பகடிவதை தானா என ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை.
இதையடுத்து MRSM கல்லூரி விசாரணையைத் தொடங்கிய நிலையில், இன்று இந்த அதிரடி முடிவு வெளியாகியுள்ளது.