
கோலாலம்பூர், டிசம்பர்-4, 72 மில்லியன் டாலர் நிதி மோசடி தொடர்பில் 19 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த சிங்கப்பூர் தொழிலதிபர் இங் தெக் லீ (Ng Teck Lee), ஒருவழியாக மலேசியாவில் கைதாகியுள்ளார்.
அவரும் அவரின் மனைவியும் நேற்று ஜோகூர் பாருவில் கைதுச் செய்யப்பட்டனர்.
பிரபல மறுசுழற்சி நிறுவனமான Citiraya Industries தலைமை செயலதிகாரியாக இருந்தபோது நிதி கையாடல் செய்ததாக புகார் எழுந்ததால், 2005-ஆம் ஆண்டு முதல் அத்தம்பதி தலைமறைவானது.
அந்நிறுவனம், விலைமதிப்பற்ற உலோகங்களை மீட்டெடுக்க மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து வந்துள்ளது.
ஆனால், உலோகங்களை மறுசுழற்சி செய்யாமல், இங் அவற்றை வெளிநாடுகளுக்கு விற்றிருக்கிறார்.
தைவான், ஹோங் கோங் கும்பல்களிடம் விற்பதற்கு, நிறுவனத்தின் நிதி செயலதிகாரியையும் மேலும் சில உயர் நிர்வாகத்தினரையும் இங் கூட்டுக் களவாணிகளாக சேர்த்துக் கொண்டுள்ளார்.
2004-ஆம் ஆண்டு அம்மோசடி வெளிச்சத்துக்கு வந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து வெளியேறி அத்தம்பதி தலைமறைவானது.
அனைத்துலக போலீஸ் வரை விவகாரம் சென்ற போதும் இந்த 19 ஆண்டுகளில் அதிகாரிகளின் கண்களின் மண்ணைத் தூவி அவர்கள் தப்பித்து வந்தனர்.
இந்நிலையில், ஜோகூர் பாருவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைதுச் செய்யப்பட்ட இருவரும், சிங்கப்பூர் ஊழல் நடைமுறை விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நிதி முறைகேடு, நம்பிக்கை மோசடி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.