Latestமலேசியா

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்; இந்தியப் பிரஜையின் வழக்கை தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் மீண்டும் தோல்வி

புத்ராஜெயா – ஆகஸ்ட்-30 – கோவிட்–19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட இந்திய நாட்டு ஆடவருக்கு, உயர்நீதிமன்றம் வழங்கிய 225,000 ரிங்கிட் இழப்பீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி கடமையில் தவறிழைத்ததும் மறு உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, விசாரணை அதிகாரி ஏ. ஜெயிந்தன் மற்றும் அரசாங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் முகாந்திரம் இல்லையெனக் கூறி, நீதிபதி Lim Chong Fong அதனை தள்ளுபடி செய்தார்.

பாதிக்கப்பட்ட மனுதாரர் ஏ. அனந்தகோபியை தவறாக தடுத்து வைத்ததற்காக பொதுவான இழப்பீடாக RM180,000 பணமும், முன்மாதிரி இழப்பீடாக RM45,000 பணமும் வழங்குமாறு, உயர் நீதிமன்ற நீதிபதி Azizul Azmi Adnan இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டார்.

நெகிரி செம்பிலான் ரந்தாவ் ஶ்ரீ பால தண்டாயுதபானி ஆலய சிலைத் திருட்டு தொடர்பான விசாரணைக்கே அனந்தகோபியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது; மாறாக, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் காலத்திற்கு இந்நாட்டில் தங்கியிருந்ததால் அல்ல.

அதோடு அந்தச் சோதனைக்குப் பிறகு அனந்தகோபி மீது முறைகேடு அல்லது திருட்டு குற்றச்சாட்டில் எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை, வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை.

எனவே, குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்காக அனந்தகோபியைக் கைதுச் செய்து காவலில் வைத்த விசாரணை அதிகாரியின் செயல், பின்னர் யோசித்து உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கூற்றுடன் மேல்முறையீட்டு நீதிமன்றமும் உடன்படுவதாக நீதிபதி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!