
கோலாலம்பூர், மார்ச்-28- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்றம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என்பது தங்களின் சொந்த முடிவே என, நிலத்தின் உரிமையாளரான Jakel குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று காலை மடானி மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு Jakel குழுமத்தின் நிர்வாக இயக்குநர் Faroz Jakel பேசியதை தெளிவுப்படுத்தி, அவ்வறிக்கை வெளியாகியுள்ளது.
Faroz ஒரு யதார்த்தத்தில் பேசியிருந்தாரே ஒழிய யார் மீதும், குறிப்பாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃபா மீது பழி போடவில்லை.
அக்கோயில் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை சாலிஹா தடுக்கவில்லை; எனவே அவர் மீது பழியைத் தூக்கிப் போடும் எண்ணம் தங்களுக்கு இல்லையென Jakel விளக்கியது.
“அனைவருக்கும் தோதுவான அமைதியானத் தீர்வையே நாங்கள் விரும்பினோம்; அதனால் தான், சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து யார் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என முடிவுக்கு வந்தோம்”
சர்ச்சை நீடித்தால் சட்ட மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம் குறித்த தனது கருத்தை மட்டுமே சாலிஹா பகிர்ந்துகொண்டார் என Jakel தெளிவுப்படுத்தியது.
Faroz பேச்சின் குரல் பதிவு வெட்டப்பட்டு, உண்மையில் அவர் சொல்ல வந்ததை விட்டு விட்டு, வேறொன்றை திணிக்கும் வகையில் அது வைரலாக்கப்பட்டுள்ளது.
இதனால், அவரின் பேச்சு சமூகத்தில் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு குழப்பான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.
“எனவே, அனைத்துத் தரப்பினரும் இனியும் இந்த விவகாரத்தை வைத்து விளையாட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்”
தேசிய நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம்; பரஸ்பர மரியாதையைப் பேணுவோம்; பல்லின – மத சமூகத்தில் ஒற்றுமைக்கு முன்னுரிமைக் கொடுப்போம் என Jakel தனதறிக்கையில் வலியுறுத்தியது.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 50 மீட்டர் தொலைவில், அருகிலுள்ள 4,000 சதுர அடி நிலத்திக்கு இடமாற கோயில் நிர்வாகம் இணங்கியதை அடுத்து, அவ்விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று Jakel நிறுவனத்தின் மடானி மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று முடிந்துள்ளது