Latestமலேசியா

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவில், ‘மேட் இன் மலேசியா’ அடையாளமா?; கேள்விகளை எழுப்பியுள்ளது

கோலாலம்பூர், ஜனவரி 12 – “மேட் இன் மலேசியா” அல்லது மலேசியாவில் தயாரிக்கப்பட்டது என கையால் எழுதப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் கதவு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம், மலேசியாவை மீண்டும் சர்வதேச விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு இட்டுச் சென்றுள்ளது.

ஜனவரி ஐந்தாம் தேதி, அமெரிக்கா, போர்ட்லேண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், போயிங் 737 Max 9 ரக விமானத்தின் கதவு நடுவானில் கழன்று விழுந்தது.

வானில், சுமார் 16 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த அந்த கதவு, ஓரிகான் நகரின் எல்லையிலுள்ள, பள்ளி ஆசிரியரான பாப் சாயரின் வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த கதவில், நிரந்தர மை “மார்க்கரைப்” பயன்படுத்தி, “மேட் இன் மலேசியா” அடையாளம், பதிவு எண் உட்பட மேலும் சில உற்பத்தி விவரங்கள் கையால் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுவது தான்.

“இது சரக்குகளை கண்காணிக்க சிறந்த வழி போல” என சம்பந்தப்பட்ட ஆசிரியர் கேலியாக கூறியிருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், நடுவானில், விமானத்தின் கதவு கழன்று விழுந்த சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்வதால், அது குறித்து கருத்துரைக்க போயிங் நிறுவனம் மறுத்து விட்டது.

அதனால், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கை தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான, மலேசியா ஏர்லைன்ஸ், தற்சமயம் மூன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை கொண்டுள்ள வேளை ; இவ்வாண்டு மேலும் ஆறு விமானங்கள் தருவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்புதிய விமானங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் ரகத்தை சேர்ந்தவை ஆகும்.

முன்னதாக, இம்மாதம் ஐந்தாம் தேதி, 177 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்ததால், அது அமெரிக்கா, ஓரிகான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அச்சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து 171 போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களின் சேவையையும் அமெரிக்கா இரத்துச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!