
கோலாலம்பூர், அக்டோபர்-15,
பள்ளிகளில் கட்டொழுங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென, ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எம். அசோஜன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று சிலாங்கூரில் பள்ளி வளாகத்திலேயே மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டது உட்பட, பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் அவ்வாறு சொன்னார்.
இச்சம்பவங்கள் மாணவர்களின் ஒழுக்கச் சீர்கேட்டையும் சமூகப் பிழைகளையும் பிரதிபலிக்கிறது.
எனவே, கட்டொழுங்கு ஆசிரியர்களுக்கு வெறும் பெயரளவிலான பொறுப்பு அல்லாமல், சந்தேகத்திற்கிடமான மாணவர் நடத்தை கண்டறியப்படும் போது நடவடிக்கை எடுக்கவும், பள்ளி உதவிப் போலீஸாருடன் நேரடி தொடர்பைப் பெறவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என அசோஜன் பரிந்துரைத்தார்.
தவிர, கல்வி அமைச்சும் பள்ளிகளில் CCTV கேமராக்களை நிறுவுவதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்; இதன் மூலம் பள்ளி நுழைவாயில்கள் மற்றும் மறைமுகப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தலாம் என்றார் அவர்.
தனது பத்தாண்டு கட்டொழுங்கு ஆசிரியர் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட அசோஜன், இப்பணி மீதான மரியாதை அண்மைய ஆண்டுகளில் குறைந்துவிட்டதாகவும், அதை மீண்டும் நிலைநிறுத்துவது மாணவர்களின் பாதுகாப்புக்கும் ஒழுக்கத்துக்கும் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
இரண்டாம் படிவ மாணவனால் நான்காம் படிவ மாணவி பள்ளியில் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பான பள்ளிச் சூழல் உருவாக வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.



