
குவாலா திரங்கானு, ஆகஸ்ட்-14 – குவாலா திரங்கானுவில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் பள்ளித் தோழர்கள் தாக்கியதில் 2-ஆம் ஆண்டு மாணவனின் கண் எலும்பு முறிந்து, மூக்கு உடைந்து போனது.
ஜூலை 30-ஆம் தேதி மாலை 4 மணியளவில் முகத்தில் இரத்தக் காயங்களுடன் மாணவன் வீடு திரும்பியபோது இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பல மாணவர்கள் அவனைத் தாக்கியதோடு, அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு, அவன் விழும் வரை முகத்தில் குத்தியதாக தாய் போலீஸில் புகார் செய்தார்.
தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனையில் காயங்கள் உறுதியானதும் பின்னர் அவன் குவாலா திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
மூன்று உடன்பிறப்புகளில் இரண்டாவது மகனான அந்த சிறுவனுக்கு மூக்கு எலும்பு முறிவை சரிசெய்ய நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மகன் பகடிவதைக்கு ஆளாவது இது முதல் முறை அல்ல என அவனது தாயார் கூறினார்.
ஜூன் மாதத்தில், ஒரு கல்லால் தாக்கப்பட்டதில் அவனது கண்ணில் காயம் ஏற்பட்டது, ஆனால் அந்த நேரத்தில் எந்த போலீஸ் புகாரும் செய்யப்படவில்லை.
இருப்பினும், இந்த அண்மையச் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தாய் கூறினார்.
இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை திங்கட்கிழமையன்று பள்ளி நிர்வாகம் சந்தித்ததாகவும் தெரிகிறது.
இச்சம்பவத்திற்கு மாணவர்களிடையே ஏற்பட்ட கேலி கிண்டலே காரணம் என, முதற்கட்ட விசாரணையில் குவாலா திரங்கானு போலீஸ் தலைவர் அஸ்லி நூர் (Azli Noor) தெரிவித்தார்.
இச்சம்பவம் மேல் நடவடிக்கைக்காக பள்ளி நிர்வாகம் மற்றும் குவாலா திரங்கானு கல்வி இலாகாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.