
சிங்கப்பூர், பிப்ரவரி-20 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு இன்று காலை சிங்கப்பூரில் நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடைசி நேர திருப்பமாக அந்நாட்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் அதனை ஒத்தி வைக்க அனுமதித்தது.
PACC எனப்படும் மரண தண்டனை வழக்கில் மேல் முறையீட்டுக்குப் பிந்தைய விண்ணப்பச் சட்டத்தின் கீழ் பன்னீர் செல்வம் விண்ணப்பித்து, அதன் மீதான முடிவு வரும் வரை, தூக்குத் தண்டனையை ஒத்தி வைப்பதாக நீதிபதி Woo Bih Li அறிவித்தார்.
PACC என்பது மரண தண்டனை நிறைவேற்றத்திற்காகக் காத்திருக்கும் ஒரு கைதி, தனக்கிருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தியப் பிறகு, கடைசியாகத் தாக்கல் செய்யும் விண்ணப்பமாகும்.
2 காரணங்கள் அடிப்படையில் பன்னீர் PACC விண்ணப்பம் செய்ய நீதிபதி அனுமதித்தார்.
போதைப்பொருள் குற்றங்களுக்கு சிங்கப்பூர் வழங்கும் தண்டனைகள் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து செய்யப்பட்டுள்ள வழக்கில், இன்னும் தீர்ப்பு வராமலிருப்பதும் அவற்றிலடங்கும்.
PACC விண்ணப்பத்தை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பன்னீருக்கு 3 நாட்கள் கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் அனுப்புநராக இருந்த வழக்கில் பன்னீர் குற்றவாளியே என 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு கட்டாய மரணதண்டனை விதிக்கப்பட்டது.