
இஸ்லாமாபாத், அக்டோபர்-26,
ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் “வெளிப்படையான போர்” வெடிக்கும் என,
பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் கவாஜா முஹமட் அசிப் (Khawaja Muhammad Asif) எச்சரித்துள்ளார்.
எல்லை பதட்டதைத் தொடர்ந்து போர்நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட சில நாட்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாக நீடித்து வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை நிரந்தரமாக்கும் நோக்கத்துடன்,
துருக்கியே தலைநகர் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
“ஆப்கானிஸ்தானும் அமைதியையே விரும்புகிறது என நம்புகிறோம்; ஆனால், ஒப்பந்தத்திற்கு அது உடன்படவில்லை என்றால் போருக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என அசிப் தெரிவித்தார்.
அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான எல்லை மோதல்கள் ஏற்பட்டன.
ஆப்கானிஸ்தான், தீவிரவாதிகளை பாதுகாப்பதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான், அந்நாட்டின் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தியது.
இதை தலிபான் அரசு தனது சுயாட்சி மீதான மீறலாக கண்டித்தது.
இந்நிலையில் இஸ்தான்புல் பேச்சுவார்த்தைகளின் முடிவு அடுத்த சில நாட்களில் தீர்மானமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை சமாதானம் நிலைத்தால் வட்டாரம் அமைதிப் பெறும்; இல்லையெனில் தெற்காசியா புதிய பதற்றத்தைச் சந்திக்கலாம் என பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.



