
இஸ்கண்டார் புத்ரி, மே 2- தாமான் புக்கிட் இன்டா அங்காடியில், வாகன நிறுத்துமிடத்திற்காக சண்டையிட்ட 2 ஆண்கள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
21 மற்றும் 49 வயதுடைய அவ்விரண்டு ஆண்களில் ஒருவர் மலேசியர் என்றும் மற்றொருவர் சிங்கபூரைச் சார்ந்தவர் என்றும் இஸ்கண்டார் புத்ரி மாவட்ட காவல்துறைத் தலைவர் எம். குமரேசன் கூறினார்.
தன்னுடைய வாகனத்தை நிறுத்தி வைக்கும் இடத்திற்கான பாதையை மற்றொருவர் மறைத்து நின்றதால் முதலில் வாய்ச்சண்டையிட்டுக் கொண்ட அவ்விருவரும், தொடர்ந்து கைச்சண்டையில் ஈடுபட்டதாக அறியப்படுகின்றது.
இவ்வேளையில் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் திரு குமரேசன் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, பொதுமக்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்கவும் அவர் நினைவூட்டினார்.