அமெரிக்காவுடனான வாணிப ஒப்பந்த விவகாரம்; ‘ஏன் நான் பதவி விலக வேண்டும்? சர்ச்சைகளுக்கு பதிலளித்த பிரதமர்

கோலாலம்பூர், நவம்பர் 4 –
அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் (ART) குறித்து எழுந்த சர்ச்சையையடுத்து, தமக்கு எதிராக வந்த ராஜினாமா கோரிக்கையை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்தார்.
இந்த பரஸ்பர ஒப்பந்தம், சரணடைந்தலோ அல்லது நாட்டை விற்றுவிடுதலோ அல்ல என்றபோது, தன்னை மீண்டும் மீண்டும் பதவி விலகச் சொல்வதை தான் ஒருபோதும் இனி ஏற்றுக்கொள்ள இயலாதென்று பாராளுமன்றத்தில் கடுமையாக பதிலளித்தார்.
மலேசியா மட்டுமல்லாமல், சீனாவும் அமெரிக்காவுடன் வர்த்தக வரி ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்துகின்றதென்றும், இதனை சாதாரண பொருளாதார ஒத்துழைப்பாகவே அனைவரும் பார்க்க வேண்டுமெனவும் விளக்கமளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ART ஒப்பந்தமானது மலேசியாவின் உணவு, வேளாண்மை, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, சுரங்கம் போன்ற முக்கிய துறைகளில் அமெரிக்காவுக்கு தலையீடு செய்ய வாய்ப்பளிப்பதாக குற்றஞ்சாட்டி, அன்வாரும் அவரது அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக அன்வார் பேசியதைத் தொடர்ந்து, மலேசிய வழக்கறிஞர் அலுவலகம், மகாதீரின் கருத்துக்களை முற்றிலும் மறுத்து, மலேசியாவின் அரசாண்மை மற்றும் தேசிய நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதனை உறுதி செய்துள்ளது.



