சைட் சாடிக்கின் விடுதலைக்கு எதிராக முறையீடு செய்ய தயார்; வழக்கறிஞர் தரப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் -30,
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவரை விடுதலை செய்ததை அடுத்து, அதற்கு எதிராக வழக்கறிஞர் தரப்பு முறையீடு செய்யத் தயாராக இருப்பதாக துணை பொதுத் துறை வழக்கறிஞர் டத்தோக் வான் ஷஹாருடீன் வான் லாடின் தெரிவித்துள்ளார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் சைட் சாடிக், ARMADA நிதிகளை உள்ளடக்கிய குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT), சொத்து மற்றும் பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து கடந்த ஜூன் 25 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பொது வழக்கறிஞர் தரப்பு, கடந்த செப்டம்பர் 22 அன்று கூட்டாட்சி நீதிமன்றத்தில் முறையீடு மனுவை தாக்கல் செய்து, அதில் 25 காரணங்களை சுட்டிக்காட்டியது.
தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை அதாவது 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 2 பிரம்படிகள் மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை, நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் நடைபெற வேண்டும் என தலைமை நீதிபதி அறிவுறுத்தியிருந்ததை முன்னிட்டு சைட் சாடிக்கின் தரப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
சைட் சாடிக் கடந்த 2021 ஆம் ஆண்டு, அப்போதைய பெர்சத்து இளைஞர் பிரிவு (ARMADA) தலைவராக இருந்தபோது, அமைப்பின் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாக மற்றும், தனிப்பட்ட பயன்பாட்டுக்காக 120,000 ரிங்கிட்டை பயன்படுத்தியதாகவும், மேலும் 50,000 ரிங்கிட்டை பண மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



