
பங்சார், ஏப்ரல்-28, ஒரு பெண்ணுக்காக 2 கும்பல்கள் மோதிக் கொண்டதில் கோலாலம்பூர் பங்சார், ஜாலான் தெலாவியில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகமே கலவரமானது.
போதாக்குறைக்கு கடைக்காரருக்கு 5,000 ரிங்கிட் வரையில் நஷ்டம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு ஏற்பட்ட அச்சண்டையில் 8 முதல் 10 ஆடவர்கள் சம்பந்தப்பட்டதாக, உணவக உரிமையாளர் போலீஸிடம் கூறியுள்ளார்.
உணவகக் கண்ணாடிகள் உடைந்து, மேசைகள் மடங்கி மோசமாக சேதமுற்றன.
சுவரில் மாட்டியிருந்த அல்-குர்ஆன் அலங்காரமும் உடைந்துபோனது.
சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் கலவரத்தால் பயந்து ஓடியதில், அவர்கள் செலுத்த வேண்டிய 1,000 ரிங்கிட்டும் கிடைக்காமல் போனது.
இரு கும்பலைச் சேர்ந்த பெண்ணை இன்னொரு கும்பல் சீண்டியதே அச்சண்டைக்குக் காரணமென, தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனை உறுதிப்படுத்திய பிரிக்ஃபீட்ல்ஸ் போலீஸ் தலைவர் கூ மாஷாரிமான் கூ மஹ்மூட், இதுவரை 3 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக சொன்னார்.
சந்தே நபர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் கூ மாஷாரிமான் கூறினார்.