Latestமலேசியா

வாங்கிய 8 மணி நேரத்தில் புதிய கார் பழுது; மாற்றித் தர இழுத்தடிக்கும் நிறுவனம் மீது நாககன்னி அதிருப்தி

கோலாலம்பூர், ஜனவரி 3 – ஜோகூர், செகாமாட்டில், புதிய காரை வாங்கிய நாககன்னி எனும் பெண் ஒருவரின் மகிழ்ச்சி அதிகபட்சம் எட்டு மணி நேரத்திற்கு கூட நீடிக்கவில்லை.

அதில், ஏமாற்றம் என்னவென்றால், அக்கார் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில், வாகன பராமரிப்பு மையத்தில் இருக்கும் போது, அதற்கு மாதம்தோறும் 537 ரிங்கிட் வங்கித் கடன் தொகையை நாககன்னி செலுத்த வேண்டி இருப்பது தான்.

கடந்தாண்டு, அக்டோபர் 17-ஆம் தேதி, காலை மணி 11 வாக்கில், செகாமாட்டிலுள்ள, கார் விற்பனை மையம் ஒன்றிலிருந்து, நாககன்னி அக்காரை வாங்கியுள்ளார்.

எனினும், எட்டு மணி நேரத்திற்கு பின் இயக்க முடியாமல் போனதால், அக்கார் மீண்டும் சம்பந்தப்பட்ட கார் விற்பனை கையத்தின், “சர்வீஸ் சென்டருக்கு” அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு அக்கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அதன் இயந்திரத்தில் சர்க்கரை இருப்பது கண்டறியபட்டதோடு, இனி அக்காரை பயன்படுத்த முடியாது என நாககன்னியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், தமக்கு புதிய காரை மாற்றித் தருமாறு நாகக்கன்னி கேட்டுள்ளார். அது நிறுவனத்தின் தலைமையகத்தின் முடிவை பொறுத்தது எனக் கூறி, இதுநாள் வரை தாம் இழுத்தடிக்கப்படுவதாக நாகக்கன்னி தமது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதோடு, பழைய காருக்கான கடனை நாககன்னி செலுத்தி வரும் போதும், இரண்டாவது முறையாக வங்கி கடனுதவிக்கு விண்ணப்பம் செய்து புதிய காரை வாங்குமாறு அவருக்கு தொடர்ந்து நெருக்குதல் அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், சரியான ஒரு பதிலை கூறாமல் தம்மை இழுத்தடிக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கும் நாககன்னி, உரிமையை நிலைநாட்ட தமது பதிவை முகநூல் பயனர்கள் வைரலாக்க வேண்டுமெனவும், கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!