கைதானார் தென் கொரிய அதிபர்; வரலாற்றில் முதல் முறை

சியோல், ஜனவரி-15, இராணுவச் சட்டம் தொடர்பில் தேச துரோக குற்றச்சாட்டை எதிர்நோக்கிய தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோல் (Yoon Sook Yeol) ஒருவழியாகக் கைதாகியுள்ளார்.
கடும் போலீஸ் பாதுகாப்புடன் அவர் அதிபர் மாளிகையிலிருந்து, ஊழல் விசாரணை அலுவலகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
போகும் போது வெளியிட்ட அறிக்கையில், வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்க விசாரணைக்கு தாம் சரணடைய முடிவுச் செய்ததாக யூன் கூறினார்.
“விசாரணை அதிகாரிகளும் போலீஸாரும், அதிபர் மாளிகைக்குள் அத்து மீறி பாதுகாப்பு அதிகாரிகளுடன் கைகலந்துள்ளனர்; எனவே யாரும் இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க நான் சரணடைந்தேன்” என்றார் அவர்.
இன்று காலை யூனைக் கைதுச் செய்ய 3,000 போலீஸ்காரர்கள் புடை சூழ விசாரணை அதிகாரிகள் அதிபர் மாளிகை சென்றனர்.
எனினும், முதன்மை நுழைவாயிலிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதிபர் மாளிகை பாதுகாவலர்களை மீறிச் செல்ல அவர்கள் முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிறிய கைகலப்பும் ஏற்பட்டது.
அதிபர் யூனைக் கைதுச் செய்ய ஜனவரி 3-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி, விசாரணை அதிகாரிகளுக்கும் அதிபர் மாளிகையின் பாதுகாப்புப் படையினருக்கும் மணிக்கணக்கில் நடந்த வாக்குவாதத்தால், தோல்வியில் முடிந்தது.
இராணுவச் சட்டங்களை அமுல்படுத்த முயன்று தோல்வி கண்ட பிறகு யூன் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேச துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதன் விசாரணைகளுக்கு வருமாறு 3 முறை அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும் அவர் கண்டுகொள்ளாததால், கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.