பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் இருமுடி கட்டு திருவிழா

கோலாலம்பூர், ஜனவரி 1 – பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் இன்று நடந்த இருமுடி கட்டு திருவிழா, பக்தி நிறைந்த சூழலுடன் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சபரிமலை மேல்சாந்தி மகேஷ் நம்போதிரி மற்றும் A.S.S ராமானுஜம் குருநாதர் ஸ்ரீ சடகோப ராமானுஜம் தலைமையில் இருமுடி திருவிழா முதன் முறையாக இன்று இந்த ஆலயத்தில் நடைபெற்றது.
கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனான இருமுடி கட்டு வைபவத்தை இன்று நிறைவேற்றியதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.காவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
சபரிமலைக்கு செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள், மலேசிய சபரிமலை என்று போற்றப்படும் பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக வந்து, தங்கள் நேர்த்திகடன்களைச் செலுத்தியதாக ஆலயத் தலைவர் யுவராஜா கூறினார்.
நாடு தளுவிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் இன்றைய விழாவில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் மகரஜோதி திருவிழாவும் மிக சிறப்பாக நடைபெறும் என ஆலயத் தலைவர் தெரிவித்தார்.
இவ்வேளையில் தங்களது இருமுடி கட்டு விழாவை குறித்து பக்தர்கள் தங்களது பக்தியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
ஏறக்குறைய 5,000 மேற்பட்ட பக்தர்கள் இன்று இருமுடி கட்டு விழாவில் பங்கேற்றனர்