
பிறை, ஆக 1 – பிறையிலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டபோது தொழிலாளர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். எனினும் நிலைமை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக காலை மணி 8.59க்கு தனது துறை அவசர அழைப்பை பெற்றதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் பாகுன் பிரான்சிஸ் ( John Fagun Francis ) கூறினார். இதனைத் தொடர்ந்து அடுத்த 10 நிமிடங்களில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பிறை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சென்றடைந்தனர்.
மேலும் ஹஸ்மாட் எனப்படும் ஆபத்து ரசாயானங்களை அகற்றும் பிரிவைச் சேர்ந்த குழுவினரும் அங்கு சென்றனர்.அந்த தொழிற்சாலையில் 500 லிட்டர் அம்மோனியா ரசாயனக் கசிவு ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் நிறுவனம் கசிவை செயலிழக்கச் செய்தது. ரசாயனத்தின் கசிவை தடுக்க ஒரு தடையை உருவாக்கும்படி நிறுவனத்திற்கு Hazmat நடவடிக்கை அதிகாரி உத்தரவிட்டார்.
தீயணைப்பு படையினர் பாதிக்கப்பட்ட தொழிற்சாலையில் இன்னமும் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.