
சென்னை, டிச 29 – தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பிரபல பிஎஸ்ஜி கல்லூரி அரங்கத்தில் ஆத்ம யோகா அறக்கட்டளை சார்பில் “மாறுவோம் முன்னேறுவோம்” என்கிற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் ம.இ.காவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ M.சரவணன் அவர்களுக்கு வாழும் வழிகாட்டி உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணனுக்கு மனித நேயச் சேவை, இலக்கியம் மற்றும் மக்களின் மேம்பாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய
பங்கிற்காக இந்த விருதை திரு . ஆசான்ஜி அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
மலேசியாவில் துணை அமைச்சராக மற்றும் மனித வள அமைச்சராக பதவி வகித்துள்ள சரவணன், கோவிட் பெருந்தொற்று காலத்தில் மொழி ,மதம், இனம் கடந்து அவரது எண்ணற்ற சமூக சேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக ஆசான்ஜி கூறினார்.
எளிய மக்களும் தன்னை அணுகக் கூடியவராக இருக்கும் ஒரு மாபெரும் ஆளுமை மிக்க தலைவராகத் டத்தோஸ்ரீ சரவணன் திகழ்கிறார்.
இவரது வாழ்வும் வார்த்தைகளும் இன்றைய இளைய தலைமுறையின் முனேற்றத்திற்கு வழிகாட்டியாக இருப்பதினால் “வாழும் வழிகாட்டி” என்ற இந்த உயரிய விருதுக்கு மிகத் தகுதியானவர் சரவணன் என்று திரு ஆசான்ஜி தனதுரையில் புகழாரம் சூட்டினார்.
விழா அரங்கில் கூடியிருந்த அனைவரின் ஏகோபித்த பலத்த கரவொலியோடு விருது வழங்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.



