
மலாக்கா, செப்டம்பர்-1 – மலாக்கா மாநகரில் நடத்தப்பட்ட ஷரியா குற்றத் தடுப்புச் சோதனையில் 8 ஜோடிகள் கல்வத் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில் மனைவியில்லாத 65 வயது முதியவரும், 49 வயது தனித்து வாழும் தாயும் ஹோட்டல் அறையில் இணைந்து தங்கியிருந்தபோது பிடிபட்டனர்.
அம்முதியவர் ஜொகூர் செகாமாட்டிலிருந்து தனது காதலியைச் சந்திக்க மலாக்காவுக்கு வந்ததாக, கல்வி, உயர் கல்வி, இஸ்லாமிய சமயத் துறை உள்ளிட்ட துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Rahmat Mariman தெரிவித்தார்.
காதலியின் நோய்வாய்ப்பட்ட தாயாரைப் பார்ப்பதற்காக மலாக்கா வந்ததாகவும் பின்னர் தேசிய தின வானவேடிக்கைகளைப் பார்க்கச் சென்றதாகவும் அம்முதியவர் விசாரணையில் கூறினார்.
மெர்டேக்கா வரவேற்புக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற அசதியால் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாகவும் இருவரும் கூறினர்.
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்குத் தெரிந்தால் அவமானமாகி விடும் என்பதால் தங்களை விட்டுவிடுமாறு இருவரும் அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளனர்.
எனினும், திருமண பந்தமின்றி தனித்திருந்த குற்றத்திற்காக அவர்கள் உட்ட மொத்தம் 16 பேரும் கைதாகினர்.
வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டதும் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.