
கோலாலம்பூர், நவ 7 – எதிர்காலத்தில் பகடிவதையினால் மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் காயத்திற்கு உள்ளாகுவது அல்லது மரணம் ஏற்படும் சம்பவங்களை தடுப்பதற்கு தற்காப்பு அமைச்சு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை எடுக்கவிருக்கிறது. மாணவர்களை கண்காணிப்பதற்கு வார்டர்களை அதிகரிப்பதோடு அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தற்காப்புத்துறை துணையமைச்சர் அட்லி ஷஹாரி ( Adly zahari ) தெரிவித்திருக்கிறார்.
உயர் கல்வி நிலையங்களில் பகடிவதை நடைபெறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்களிடையே மட்டுமின்றி , மாணவர்கள் மற்றும் இதர தரப்புகளுடனும் பகடிவதை ஏற்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆனால் இதற்கு முன் மாணவர்களிடையே பகடிவதை ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்துள்ளோம் என அட்லி கூறினார். மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் பகடிவதை சம்பவங்கள் மீண்டும் ஏற்பட்டால் அமைச்சு அதனை சகித்துக்கொள்ளாது என்பதோடு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என Adly எச்சரித்தார். அதேவேளையில் பகடிவதை சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டால் சட்டத்திற்கு ஏற்ப விசாரணை நடத்துவதற்கு போலீசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்,