
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-19-e-hailing சேவைகளை வழங்கும் Grab நிறுவனம், பொருட்களை அனுப்பும் அதன் ஓட்டுநர்கள் சிலர், வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ கேட்டு பெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தற்போது விசாரித்து வருகிறது.
Grab பயனர் ஒருவருக்கு 3 ஓட்டுநர்கள் அனுப்பியதாகக் கூறப்படும் தகவலின் screenshot-கள் ஒரு ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டது வைரலானதை அடுத்து, Grab விசாரணையில் இறங்கியுள்ளது.
“பெட்ரோலுக்குப் பணம் தேவை”, “சிரமங்கள் உள்ளன” போன்ற காரணங்களைச் சொல்லி அவர்கள் ‘டிப்ஸ்’ கேட்டுள்ளனர்.
ஒருவரோ, வாடிக்கையாளர் முடியாது என மறுத்த பிறகும் கூட, அவரிடம் கூடுதல் உணவு பொருட்களை விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த Grab, சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு எதிராக கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.
நிறுவனத்தின் நடத்தை விதிகளில், பொருட்களை அனுப்பும் சேவையில் உள்ள ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ கேட்பது முற்றிலும் தடைச் செய்யப்பட்டுள்ளது என்பதை Grab சுட்டிக் காட்டியது.
‘டிப்ஸ்’ வழங்குவது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொருத்தது; அது சிறந்த சேவைக்கு ஒரு சிறிய அங்கீகாரமாகப் பார்க்கப்படும் ஒன்றே தவிர, கொடுத்தே ஆக வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கட்டாயமும் இல்லை என Grab தெளிவுப்படுத்தியது.



