
கோத்தா கினாபாலு, ஜனவரி-22-இப்போதைக்கு ம.இ.கா தேசிய முன்னணியிலேயே தொடருவதாக, அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சம்ரி அப்துல் காடிர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியாக சேரும் ம.இ.காவின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி நேற்று செய்திகள் வெளிவந்த நிலையில் சம்ரி அவ்வாறு சொன்னார்.
“ம.இ.கா இன்னமும் BN உறுப்புக் கட்சியே. அவர்கள் விலகியதாகக் கூறப்படும் செய்திகள் உண்மையல்ல. எங்களுக்கும் அப்படி எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை” என்றார் அவர்.
சபா, கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு சம்ரி பேசினார்.
நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக, அக்கூட்டத்தில் ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை; மற்ற சில தலைவர்களுக்கும் அதே நிலைதான் என சம்ரி விளக்கினார்.
என்றாலும், ம.இ.காவுடனான தேசிய முன்னணியின் உறவு சுமூமாகவே நீடிக்கிறது என்றார் அவர்.
இவ்வேளையில் அதே கூட்டத்தில் PPP கட்சி மீண்டும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக முறைப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டுள்து.
தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் குறித்து தைப்பூசத்துக்குப் பிறகு அதன் மத்திய செயலவை முடிவு செய்யுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



