
லண்டன், ஜனவரி-21 – ஊழல், இன மற்றும் மத தீவிரவாதப் போக்கை விட்டொழிக்கும் தைரியம் மலேசிய இளையோருக்கு வர வேண்டுமென பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார்.
மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட அமைதியான சுபிட்சமான நாடு; ஆனால் அது சிலரின் கண்களுக்குப் பொறுக்கவில்லை; அதனால் தான் இன-மத வாதங்களை முன்னிறுத்தி நாட்டை அவர்கள் பிளவுப்படுத்துவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
இந்நாட்டை சீனர்களுக்கு விற்று விட்டோம்; சீனர்களின் கைகளுக்கு அதிகாரம் சென்று விட்டது; பினாங்கு கிறிஸ்துவமயாக்கப்பட்டு விட்டது என ஏராளமான கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.
ஜோகூர் பாருவில் சீன உணவகத்தில் தாம் உணவருந்தியதை கூட பெரிதாக்கி அத்தகையோர் குளிர்காய்ந்தனர்; அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இனங்கள் மோதிக்கொள்ள வேண்டுமென்பதே.
அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு அக்கூட்டம் தயாராக இருப்பதாக பிரதமர் சாடினார்.
அரசாங்கக் கொள்கைகளை விமர்சனம் செய்யுங்கள்; அதை நான் பொறுத்துக் கொள்வேன்; ஆனால் இன-மத விவகாரங்களை முன்னெடுத்தால், நான் அமைதிக் காக்க மாட்டேன், நிச்சயம் கடுமையாக நடந்துகொள்வேன் என டத்தோ ஸ்ரீ அன்வார் எச்சரித்தார்.
நான் மலேசியத் தலைவராக இருக்க விரும்புகிறேன்; மலாய்க்காரர், சீனர், இந்தியர், கடசான், இபான் என எந்த பாகுபாடுமின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதே எனது பாணி என்றார் அவர்.
பிரிட்டனுக்கான அண்மைய பயணத்தின் போது, லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவில்டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு பேசினார்.