
ஜகார்த்தா, அக்டோபர்- 15,
இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவில் உள்ள லூவோதோபி லாகி-லாகி எரிமலை நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை வெடித்து, 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பலை வெளியேற்றியது.
வெடிப்புக்கு முன்பு ஆழ்ந்த நில அதிர்வுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, எச்சரிக்கை நிலை உச்சமாக உயர்த்தப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏதும் இல்லை என்று தேசிய எரிமலைவியல் நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் அதிகாரிகள் அருகிலுள்ள மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை எரிமலை பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து மௌமேரே நகர விமான நிலையம் பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.
கனமழை பெய்தால் சாம்பல் மற்றும் கற்கள் கலந்த அபாயகரமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்திலும் இதே எரிமலை வெடித்ததில், பாலி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.