
கோலாலம்பூர், மார்ச்-1 – மலேசிய ஊடக மன்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருப்பதானது, உள்ளூர் ஊடகத்துறையினரின் அரை நூற்றாண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.
மக்களுக்கான வெற்றியாகவும் அதைப் பார்க்கலாமென பிரபல அரசியல் ஆய்வாளரும் முன்னாள் பத்திரிகையாளருமான Dr ஜி.மணிமாறன் கூறியுள்ளார்.
மக்களவையில் மசோதா நிறைவேறியிருக்கும் நிலையில், மேலவை மற்றும் மாமன்னரின் ஒப்புதல் கிடைத்து அம்மன்றம் செயல் வடிவம் பெற இன்னும் 3-4 மாதங்கள் ஆகலாம்.
பின்னர் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மன்றம் முழுமையாகச் செயல்படத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குப் பிறகு தான் உண்மையான சவால்களை அம்மன்றம் சந்திக்க வேண்டியுள்ளது என, வணக்கம் மலேசியாவிடம் மணிமாறன் கூறினார்.
உள்ளூர் ஊடகங்கள் நியாயமாக, நேர்மையாக, சுதந்திரமாக மற்றும் தொழில் தர்மத்தோடு நடந்துகொள்கின்றனவா என்ற கேள்வி நிலவுவதை மறுக்க முடியாது.
எனவே, ஊடகங்கள் மீதான தவறானக் கண்ணோட்டத்தைப் போக்கும் பெரும் பொறுப்பு அந்த 21 நிர்வாக உறுப்பினர்களுக்கு உண்டு என மணிமாறன் சுட்டிக் காட்டினார்.
மன்றம் அமைக்கப்படுவது பெரிதல்ல, யாருடைய கண்ணசைவும் இல்லாமல் அது சுதந்திரமாகச் செயல்படுகிறதா என்பதே முக்கியம்.
அவ்வகையில் சுதந்திரமாகச் செயல்படுமா அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் மன்றம் இயங்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டுமென மணிமாறன் கூறினார்.
நிச்சயமாக மக்களும் அதனை அணுக்கமாகக் கண்காணிப்பார்கள் என்றார் அவர்.
இவ்வேளையில், மின்னியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ள பெர்னாமா சட்டத் திருத்தத்தையும் மணிமாறன் வரவேற்றார்.
ஊடகங்களை இனியும் பிரித்து ஒதுக்கி வைக்க முடியாது; இது காலத்தின் கட்டாயம் என்றார் அவர்.
1973-ஆம் ஆண்டு முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்ட இந்த ஊடக மன்ற மசோதா, 52 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு மடானி அரசாங்கத்தின் கீழ் சாத்தியமாகியுள்ளது.
மலேசிய ஊடகங்களின் சுதந்திரத்தை உறுதிச் செய்ய தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் முன்னெடுத்த முயற்சியின் பலனாக, இந்த நெடுநாள் கனவு நிறைவேறியுள்ளது.