
கோலாலம்பூர், டிசம்பர்-5 – மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை அடுத்தாண்டு 70 விழுக்காடு வரை உயர்த்தும் காப்புறுதி நிறுவனங்களின் செயல் கொஞ்சமும் ஏற்புடையதல்ல.
மக்களின் சிரமத்தை அவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ள நினைக்கின்றன.
எனவே, மத்திய வங்கியான பேங்க் நெகாராவும் சுகாதார அமைச்சும் அதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் காப்புறுதி நிறுவனங்கள் நல்ல இலாபத்தைப் பதிவுச் செய்துள்ளன.
அப்படியிருக்க மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை 40 முதல் 70 விழுக்காடு வரை உயர்த்துவதென்பது, தார்மீக அடிப்படையில் ஒழுக்கமற்றச் செயல் என DAP தேசியத் தலைவருமான குவான் எங் சாடினார்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டண உயர்வை காரணம் காட்டி, காப்புறுதி நிறுவனங்கள் பிரீமியம் கட்டணத்தை உயர்த்துகின்றன.
எனவே, தனியார் மருத்துவமனைக் கட்டண உயர்வைத் தடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்களவையில் 2024 நிதிச் சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது குவான் எங் பேசினார்.
வாழ்க்கைச் செலவின உயர்வு ஒரு பக்கம், சம்பளம் உயராதது இன்னொரு பக்கம்.
இந்தச் சூழலில் மக்கள் மீது மேலும் சுமையை இறக்குவதா என குவான் எங் சாடினார்.
அடுத்தாண்டு 40 முதல் 70 விழுக்காடு வரை காப்பீட்டு பிரீமியம் தொகை உயருவதால், மாத சந்தாவும் உயருகிறது.
அதனைச் சமாளிக்க முடியாதெனக் கூறி ஏராளமான காப்பீட்டுத்தாரர்கள், காப்பீட்டு பாதுகாப்புத் திட்டத்தை முடித்துக் கொண்டதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.