
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – 13 வயது மதிக்கத்தக்க ஜாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான போலீஸ் விசாரணைகள் நிறைவடையும் வரை, SMKA துன் டத்து முஸ்தபா பள்ளியின் முதல்வர், மூத்த உதவியாளர் மற்றும் அனைத்து வார்டன்களும் தற்காலிகமாக சபா மாநில கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், புக்கிட் அமான் காவல்துறை தலைமையகம், ஜாரா கைரினா மரணத்தை விசாரிக்க சிறப்பு பணிக்குழு அமைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்வி அமைச்சு, சம்பந்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணை நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 16 ஆம் தேதியன்று, 13 வயது ஜாரா கைரினா தனது பள்ளி வளாகத்திலுள்ள வடிகாலில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கோத்தா கினாபாலு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மறுநாள் அவர் காயங்களால் உயிரிழந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று, அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தியதைத் தொடர்ந்து பின்னர் மறுநாள் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.