
கோலாலம்பூர், அக் 16- அக்டோபர் 16 ஆம் தேதியன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு நீர்ப்பாசனம், வடிகால் துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பணியாளர்கள் தாமதமாக பதிலளித்ததாகக் கூறப்படுவதை பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஷலேஹா முஸ்தபா
( Zaleha Mustafa ) மறுத்தார். இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த அந்த வெள்ள சம்பவத்தின்போது வடிகால் நீர்ப்பாசனம் மற்றும் மாநகர் மன்ற பணியாளர்கள் கடமையில் இருந்ததாக அவர் கூறினார்.
வானிலை அறிக்கையின்படி, காலை 8.30 மணிக்கு தொடங்கிய மழை காலை மணி 10.45 அளவில் நின்றது. அன்றைய தினம் வடிகால் நீர்ப்பாசனத்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற பணியாளர்கள் தண்ணீரை திருப்பிவிடவும், வெள்ளநீரை வெளியேற்றவும் உதவினார்கள். எனவே, அவர்கள் தாமதமாக பதில் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுவது தவறானது என்று இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வழங்கிய பதிலில் ஷலேஹா தெரிவித்தார். அன்றைய தினம் பரபரப்பான நெரிசல் மிக்க நேரத்தில் பெய்த மழையால் கோலாலம்பூர் மாநகரின் பல சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியதால் பெரிய அளவில் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டது. வெள்ள நீரில் சிக்கிய கார்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் பரவலாகப் பகிரப்பட்டன. அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும் நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.