
கோலாலம்பூர், மார்ச்-10 – தைப்பூசக் காவடியாட்டத்தை இழிவுப்படுத்தி இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் வெளியிட்ட facebook பதிவு Meta நிறுவனத்தால் நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதனை அவர் மீண்டும் பதிவேற்றியுள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சித் தெரிவித்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், போலீஸார் சம்ரியை உடனடியாகக் கைதுச் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
இவ்வளவு நடந்தும், ‘நிந்தனைக்குரிய மற்றும் பொறுப்பற்ற’ அப்பதிவை அவரால் மீண்டும் பதிவேற்ற முடிகிறது என்றால், அவர் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை என அப்பட்டமாகத் தெரிகிறது.
மதங்களுக்கிடையிலான பதற்றத்தை சம்ரி வினோத் தொடர்ந்து தூண்டி விடுவதால் இனியும் அவரை போலீஸார் விட்டு வைப்பது சரியல்ல; சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பது உண்மையென்றால், சம்ரி வினோத் உடனடியாகக் கைதுச் செய்யப்பட வேண்டும் என ராயர் கேட்டுக் கொண்டார்.
காவடியாட்டத்தை பேயாட்டம் என்றும் மது போதையில் ஆடும் ஆட்டமென்றும் கொச்சைப்படுத்தி சம்ரி வினோத் வெளியிட்டிருந்த பதிவு முன்னதாக சமூகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
நூற்றுக்கணக்கில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதோடு, போலீஸாரும் அவரை அழைத்து வாக்குமூலம் பதிவுச் செய்தனர்.
மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC-யும் சம்ரி வினோத்தின் அப்பதிவை நீக்குமாறு facebook-கைக் கேட்டுக் கொண்டது; ஆனால் தங்களால் கேட்க தான் முடியும், நீக்குவதும் நீக்காததும் அந்த சமூக ஊடகத்தின் முடிவு என அவ்வாணையம் தெளிவுப்படுத்தியது.
நேற்று மதியம் வாக்கில் அப்பதிவை facebook நீக்கிய நிலையில், சம்ரி வினோத் அதனை மீண்டும் பதிவேற்றியுள்ளார்.