
ஷா ஆலாம், பிப்ரவரி-17 – சிலாங்கூர், ஷா ஆலாமில் நிகழ்ந்த பயங்கர சம்பவமொன்றில், 3 மாத சம்பள பாக்கியால் ஆத்திரமுற்ற ஊழியர், மளிகைக் கடை மேலாளரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டிக் கொன்றார்.
செக்ஷன் 7-ல் உள்ள மளிகைக் கடையில் வெள்ளிக்கிழமை காலை, 45 வயது வங்காளதேச ஆடவர் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தது கண்டு பொது மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
பிப்ரவரி 10-ஆம் தேதி தன் கைக்கு வந்திருக்க வேண்டிய 2,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட சம்பளத் தொகை வராததால், சந்தேக நபர் கோபமடைந்துள்ளார்.
இதனால் மேலாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், திடீரென கடையிலிருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து அவரை பல முறை வெட்டினார்.
தலை, உடல் மற்றும் கைகளில் வெட்டுக் காயங்களுக்கு ஆளான கடை மேலாளர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மாண்டார்.
இதையடுத்து, முதன்மை சந்தேக நபர் உட்பட 5 வங்காளதேசிகளைப் போலீஸார் விசாரணைக்காகக் கைதுச் செய்தனர்.
அவர்களில் இருவர் பெண்களாவர் என ஷா ஆலாம் போலீஸ் கூறியது.