
கோலாலாம்பூர், ஜூன்-18 – மறைந்த ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல், தனது பதவி காலத்தில் பத்து மலை முருகன் திருத்தலத்திற்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட ஆலய வளர்ச்சிப் பணிகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ என். நடராஜா நினைவுக் கூர்ந்தார்.
இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராகவும் இருந்த பழனிவேல், அப்பதவியின் மூலம் அரசாங்கத்திடமிருந்து பத்து மலைக்கு மானியங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் அவ்வுதவிகளை நினைவுக் கூர்ந்து நன்றித் தெரிவிப்பதாகவும், வணக்கம் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் தான் ஸ்ரீ நடராஜா சொன்னார்.
அன்னாரை இழந்து துயரில் வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
31 ஆண்டுகளுக்குப் பிறகு ம.இ.காவில் தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்த போது, துன் எஸ். சாமிவேலுவுக்கு பதிலாக, அக்கட்சியின் 8-ஆவது தேசியத் தலைவராக பதவியேற்றவர் பழனிவேல் ஆவார்.
இந்நிலையில் அண்மைய காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தவர், நேற்று காலை தமது 76 வயதில் காலமானார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.