
குவால திரங்கானு, ஏப்ரல்-18, அதிக கமிஷன் கிடைக்குமென வாட்சப் குழுவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, இணைய வேலை வாய்ப்பு மோசடியில் 30,200 ரிங்கிட்டை இழந்துள்ளார் குவாலா திரங்கானுவைச் சேர்ந்த மாது ஒருவர்.
சூரிய விளக்குப் பரிசாகக் கிடைக்குமெனக் கூறி ஏப்ரல் 4-காம் தேதி ஒருவர் 39 வயது அம்மாதுவைத் தொடர்புகொண்டுள்ளார்.
கமிஷன் அடிப்படையிலான மின்னியல் வர்த்தக வேலை வாய்ப்பு அவருக்கு அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து ஒரு வாட்சப் குழுவில் சேர்க்கப்பட்டவருக்கு, சில பணிகள் கொடுக்கப்பட்டன.
சொல்லியபடி அவற்றுக்கான கமிஷன்கள் வழங்கப்பட்டதால், அந்த ‘வேலை வாய்ப்பை’ அவர் முழுமையாக நம்பினார்.
எனினும் இடப்பட்ட அடுத்தடுத்த பணிகளுக்கு கமிஷன் தரப்படவில்லை; காரணம் கேட்டால், தாமதமாக வேலையை முடித்ததாக பதில் வந்தது.
என்றாலும், கிடைக்க வேண்டிய அனைத்து கமிஷன்களையும் பெற்றே தீருவதென்ற முடிவில், சந்தேக நபருக்கு 6 தடவையாக மொத்தம் 30,200 ரிங்கிட்டை அவர் மாற்றியுள்ளார்.
ஆனால் கமிஷன் வந்தபாடில்லை; தொடர்பிலிருந்தவரும் காணாமல் போனார்.
அதன் பிறகே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்ததாக, தனது போலீஸ் புகாரில் அம்மாது கூறினார்.