
கோலாலாம்பூர், ஜூன்-26 – மலேசியாவில் உள்ள வங்கிகள் ஜூலை 1 முதல் கட்டணங்கள் மற்றும் கமிஷன்களை உள்ளடக்கிய சில நிதிச் சேவைகளுக்கு, 8 விழுக்காடு சேவை வரியை வசூலிக்கத் தொடங்கும்.
ABM எனப்படும் மலேசிய வங்கிகள் சங்கம், மலேசிய இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சங்கம் மற்றும் மலேசிய முதலீட்டு வங்கி சங்கம் ஆகியவை ஒரு கூட்டு அறிக்கையில் அதனை அறிவித்துள்ளன.
நிதி அமைச்சு மற்றும் அரச மலேசிய சுங்கத் துறையின் வழிகாட்டுதல்களின்படி கட்டம் கட்டமாக அவ்வரி விதிப்பு செய்யப்படும்.
அண்மையில் அரசிதழில் வெளியிடப்பட்ட சேவை வரி விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த அமுலாக்கம் அமைகிறது.
இருப்பினும், சில அடிப்படை சேவைகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அம்மூன்று சங்கங்களும் உறுதியளித்தன.
உதாரணமாக, சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் தொடர்பான கட்டணங்கள், பொது மக்களுக்கான அடிப்படை சேவைகள் உட்பட, வழக்கமான அல்லது இஸ்லாமிய வங்கியாக இருந்தாலும் வரி விதிக்கப்படாது.
இந்த சேவை வரி அமுலாக்கம் குறித்த மேல் விவரங்களுக்கு அந்தந்த வங்கி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்க்குமாறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.