
கோத்தா கினாபாலு, செப்டம்பர்-4- முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரை ஒரு சலவை இயந்திரத்தினுள் தள்ளுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று!
சபா, கோத்தா கினாபாலுவில் இன்று நடைபெற்ற சாரா மரண விசாரணையில், தடயவியல் உடற்கூறு நிபுணர் ஒருவர் அதனைத் தெரிவித்தார்.
சிறுமியின் எடையை கணக்கில் கொண்டாலே அப்படி நடந்திருக்க சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக, குயின் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த Dr Jessie Hiu கூறினார்.
படிக்கட்டுக்கு எதிரே தரை தளத்தில் வீட்டு சலவை இயந்திரம் இருப்பது உண்மை தான்; ஆனால் அந்த இயந்திரம் 53 கிலோ எடையுடன் இயங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என, நீதிமன்றத்தில் அவர் சொன்னார்.
உயிரிழப்புக்கு முன் சாரா சலவை இயந்திரத்தினுள் தள்ளப்பட்டதாக, ஆங்கில மொழி ஆசிரியை ஒருவர் முன்னதாக டிக் டோக்கில் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்திருந்த நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லையென்பது இன்று மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜூலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பாப்பாரில் உள்ள தனது பள்ளியின் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து சுயநினைவற்ற நிலையில் சாரா கண்டெடுக்கப்பட்டார்.
மறுநாள் கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். சாரா பகவடிதைக்கு ஆளானதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.