Latestமலேசியா

44 குற்றப்பதிவுகளைக் கொண்ட ஆயுதமேந்தியக் கொள்ளையன் புக்கிட் துங்குவில் போலீஸாரால் சுட்டுக் கொலை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – 44 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள ஆயுதமேந்தியக் கொள்ளையன், இன்று தலைநகர் புக்கிட் துங்குவில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான்.

கொள்ளையிடுவதற்கு புதிய வீட்டை தேடிக் கொண்டிருந்தவனை போலீஸார் நெருங்கி சோதனையிட முயன்ற போது, அவன் துப்பாக்கியால் சுட, போலீஸும் பதிலுக்கு சுட்டதில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இன்று அதிகாலை 4.10 மணிக்கு புக்கிட் அமானும் கோலாலாம்பூர் போலீஸும் இணைந்து மேற்கொண்ட Op Api KL 3’ என்ற அதிரடி சோதனையின் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக, புக்கிட் அமான் குற்றப்புனலாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்கஸ் (Datuk Fadil Marcus) தெரிவித்தார்.

அந்த 36 வயது நபர், கொள்ளை, வன்முறை, வீடு உடைத்து திருடுதல், போதைப் பொருள் என பல்வேறு குற்றங்களுக்காக நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவன் ஆவான்.

அவன் 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பலின் தலைவன் என்றும் நம்பப்படுகிறது.

கடந்தாண்டு கோலாலாம்பூர், சிலாங்கூர், பேராக் ஆகிய மாநிலங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுக்கு இக்கும்பல் பின்னணியில் இருந்துள்ளது.

சில சமயம், போலீஸ் போல் ஆள் மாறாட்டம் செய்து, பாதுகாப்பு பெட்டகம், தங்கக் கட்டிகள், ரொக்கப் பணம் போன்றவற்றை வைத்திருக்கும் ‘பணக்காரர்களின்’ வீடுகளையும் வர்த்தகத் தளங்களையும் அவர்கள் குறி வைக்கின்றனர்.

தவிர, போதைப்பொருள் விநியோகத்திலும் அக்கும்பல் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய போலீஸ், எஞ்சிய உறுப்பினர்களுக்கு வலை வீசியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!