
நாராத்திவாட், பிப்ரவரி-24 – தாய்லாந்தின் யாலா மாகாணத்தில் பேரங்காடி அருகே குண்டு வெடித்ததில், 7 போலீஸ்காரர்கள் உட்பட 23 காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8.20 மணிக்கு குண்டு வெடித்தது.
குண்டு வெடிப்புக்கு, அதிகாரத் தரப்பு தீவிரமாகத் தேடி வரும் ஆயுதமேந்திய கும்பலே காரணமாக இருக்கலாமென மாவட்ட போலீஸ் கூறியது.
சம்பவத்தின் போது 2 வாகனங்களில் போலீஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களின் வாகனங்கள் பேரங்காடியை அடைந்ததும், அங்கு மறைத்து வைக்கப்பட்டு தொலைதூர கட்டுப்பாட்டுக் கருவி மூலம் அக்குண்டு வெடிக்கப்பட்டது.
காயமடைந்த 7 போலீஸ்காரர்களும் 16 பொது மக்களும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் தாய்லாந்தில் நீண்ட காலமாக நீடித்து வரும் மோதல்களுக்குத் தீர்வு காணும் வகையில், முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவாட் அங்கு வருகை மேற்கொள்வதற்கு முதல் நாள் குண்டு வெடித்துள்ளது.
ஆசியான் தலைமையின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு தக்சின் அப்பகுதிக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
அதோடு 2006-ல் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டு சீமார் 20 ஆண்டுகள் கழித்து அவர் அங்கு செல்கிறார்.