
ரவூப், ஜூன்-11 – பஹாங் ரவூப்பில் ஒரு கணினி கடையில் திருட முயன்று தோல்வியடைந்த ஆடவன், விரக்தியில் கடையின் சமையலறையில் தனது மலக்கழிவை வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
கடைக்குள் நுழைய அவன் மேற்கொண்ட முயற்சி, உரிமையாளரும் அவரது தாயாரும் இன்னும் வேலையில் இருப்பதைக் கண்டபோது முறியடிக்கப்பட்டது.
இதனால் ‘அதிருப்தியடைந்தவன்’ சமையலறையில் ஒரு குவியல் மலத்தை விட்டுவிட்டு சத்தமில்லாமல் வெளியேறினான்.
இரவு வெகுநேரமாகிய பிறகு, கடையின் உரிமையாளர் கடையில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார்.
அங்கு மலக்கழிவு இருப்பதைக் கண்டவர் முதலில் அது பிராணிகள் விட்டுச் சென்றவையாக இருக்கலாம் என நினைத்தார்.
ஆனால், கடையின் பின்புறக் கதவு சேதமடைந்திருப்பதைக் கண்டறிந்த பிறகே அது மனித மலம் என அவர் சந்தேகித்தார்.
பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து பெறப்பட்ட CCTV காட்சிகளைப் போட்டுப் பார்த்ததில், மர்ம நபர் ஒருவர் பின்புறக் கதவின் உலோகப் பலகையைத் திறந்து உள்ளே ஏறுவதைக் கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.
இதையடுத்து அக்கொள்ளை முயற்சி குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.