திருப்பதி திருமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; ஆந்திர முதல்வர் நாயுடு அவசர ஆலோசனை

திருப்பதி, ஜனவரி-9, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் வரிசையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் திருப்பதி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலையில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு தொடங்குவதால் இலவச தரிசன டிக்கெட் வழங்க 8 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்று காலை 5 மணிக்குத் தான் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், டிக்கெட் முகப்பிடங்களில் நேற்றே மாலையே பக்தர்கள் கூட்டம் குவிந்தது.
இதில் விஷ்ணு நிவாசம் மையத்தில் மட்டுமே சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்ததாகக் கூறப்படுகிறது.
வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர்கள் டிக்கெட்டுகளை வாங்க முண்டியடித்துக் கொண்டதில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஒருவர் மீது ஒருவர் விழும் நிலை உண்டானது; மூச்சுத்திணறல் ஏற்பட்டும் சிலர் மயங்கி விழுந்தனர்.
பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைப் பலனளிக்காது தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இவ்வேளையில் அச்சம்பவம் குறித்து அதிர்ச்சித் தெரிவித்த ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவசர ஆலோசன நடத்தி மீட்டுப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
இன்று காலை திருப்பதி சென்று காயமடைந்தவர்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது.