கலிஃபோர்னியா காட்டுத் தீ; 3 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

புத்ராஜெயா, ஜனவரி-13, அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத் தீ தொடர்ந்து மோசமாகி வருவதால், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கான மலேசியத் தூதர் டத்தோ ஸ்ரீ மொஹமட் நஸ்ரி அசிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.
புதன்கிழமை வரை பலத்த காற்று வீசுமென அறிவிக்கப்பட்டிருப்பதால், காட்டுத் தீ வேகமாகப் பரவலாம் என அஞ்சப்படுகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மூவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலைமை மேலும் மோசமடைந்தால் ஏராளமான மலேசிய மாணவர்கள் வெளியேற்றப்படலாம்.
அவர்களுக்கான தங்குமிட வசதியை தூதரகம் ஏற்பாடு செய்து வருவதாக நஸ்ரி சொன்னார்.
கலிஃபோர்னியா காட்டுத் தீயில் 14 மலேசிய மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக உயர் கல்வி அமைச்சு முன்னதாக உறுதிப்படுத்தியது.
அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு, தேவைப்பட்டால் அங்கிருந்து வெளியேற வேண்டிய திட்டம் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.
வரலாறு காணாத காட்டுத் தீயால் லாஸ் ஏஞ்சலஸும் கலிஃபோர்னியாவும் பற்றி எரிகின்றன.
இதுவரை 16 பேர் அதில் உயிரிழந்துள்ளனர்.