
கோலாலம்பூர், அக்டோபர்-6, மோட்டார் சைக்கிள்களுக்கான B1,B2 உரிமத்தை முழு B உரிமத்திற்கு மாற்றும் சிறப்புத் திட்டத்திற்கு கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
எனவே, அத்திட்டத்தில் பதிந்துகொள்ள யாரும் அவசரப்படத் தேவையில்லை என, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ கேட்டுக் கொண்டது.
அச்சிறப்புத் திட்டம் அக்டோபர் முதல் தேதி தொடங்கியதிலிருந்து, சம்பந்தப்பட்ட வாகனமோட்டும் பயிற்சி மையங்களுக்கு விண்ணைப்பங்கள் குவிந்த வண்ணமுள்ளன.
கிடைக்கப் பெறும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலிக்குமாறு அவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எனவே தகுதிப் பெற்றோர் முண்டியடித்துக் கொண்டு விண்ணப்பிக்க அவசியமில்லையென, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் JPJ கூறியது.
இவ்வேளையில், MyJPJ செயலியில் பதிந்துகொள்ளும் போது பலருக்கு “குடிமக்கள் அல்லாதவர்கள் தகுதியற்றவர்கள்” என்ற செய்தி காட்டப்பட்ட சம்பவம், கணினி கோளாறால் ஏற்பட்டதாகும்.
அது சரிசெய்யப்பட்டு விட்டது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் செயலியிலிருந்து வெளியேறி (log out) மீண்டும் உள்நுழையுமாறு (log in) JPJ கேட்டுக் கொண்டது.
பிறகு தங்களின் தகுதியை அவர்கள் சரிபார்க்க முடியும்.
சேவையளிப்புத் தரத்தை உயர்த்துவதில் பொதுமக்களின் கருத்துக்களை பெரிதும் வரவேற்பதாக JPJ மேலும் கூறியது.
அச்சிறப்பு மாற்றுத் திட்டத்தில் பங்கெடுக்க, நாட்டில் B1 மற்றும் B2 உரிமங்களை வைத்திருக்கும் 93 லட்சத்து 10 ஆயிரம் பேரில், 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் தகுதிப் பெற்றிருக்கின்றனர்.