
கோலாலம்பூர், ஜனவரி 12 – வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் 12வது ஆண்டாக மலர்ந்த மாணவர் முழக்கத்தின் மாபெரும் வெற்றியாளர் இடத்தைப் தட்டிச் சென்றது ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாதத் திறனை வெளிக்கொணர உருவாக்கும் கண்ட இப்போட்டியின் இறுதிச் சுற்று நேற்று பத்துமலை, இரமாயாண குகையில் மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது.
‘நான் பிரதமரானால் அதிமுக்கியமாகத் தீர்க்கப் பாடுப்படும் மலேசியாவின் பிரச்சனை’ எனும் தலைப்பில், நான்கு நிலைப்பாட்டில் வாதிட்ட போட்டியாளர்களில், முதல் வெற்றியாளராக ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த Sesvin Rao Ananthan வாகை சூடினார்.
இவருக்கு வெற்றிக் கோப்பையுடன், நற்சான்றிதழ் மற்றும் 3000 ரிங்கிட் ரொக்கமும் வழங்கப்பட்டது.
இரண்டாம் மூன்றாம் நிலையை முறையே, பேராக், ஜென்ராத்தா பிரிவு 1 தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த Sassmitta Vasan Kumar, 2000 ரிங்கிட் ரொக்கத்தையும், கெடா, கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த Griishenn Kogulabalan 1000 ரிங்கிட் ரொக்கத்தையும் வென்றனர்.
750 ரிங்கிட் ரொக்கத்துடன் நான்காம் நிலையை, சிலாங்கூர் காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த Rachshana Poobalan தட்டிச் சென்றார்.
1000க்கு மேற்பட்ட மாணவர்களிடமிருந்து தொடங்கிய 2024ஆம் ஆண்டு போட்டியில் 40 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.
பின்னர், 14 மாணவர்கள் அரையிறுதியில் தங்கள் திறமையை நிரூபித்ததை தொடர்ந்து, 4 மாநிலங்களைச் சேர்ந்த சொல் வீரர்கள் இறுதிச் சுற்றில் களம் இறங்கி திறம்பட பேசினர்.
இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் அரையிறுதிச் சுற்று மாணவர்களுக்கும், ஒரு சில புள்ளிகளால் இறுதிச் சுற்றுக்கு வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு ‘வளரும் நட்சத்திரம்’ எனும் அங்கீகாரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மொழித்திறனையும், வாதத் திறமையையும் வளர்க்கும் மாணவர் முழக்கத்தின் இறுதிப் போட்டியிலும் பரிசளிப்பு விழாவிலும் சிறப்பு பிரமுகராக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரும் அரங்காவலருமான டான் ஸ்ரீ ஆர். நடராஜாவும், அவருடன், வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி, ம.இ.காவின் தேசிய உதவித்தலைவர் டத்தோ நெல்சன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், ம.இ.காவின் தேசிய பொருளாரும் மஹிமாவின் தலைவருமான டத்தோ சிவக்குமார், மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி, தமிழ்ப்பள்ளிகளின் முன்னாளா அமைப்பாளரா பாஸ்கரன் சுப்பிரமணியம், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் SS பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். வழக்கறிஞர் கனல்வீரன், முனைவர் ரஹிம் நடுவர்களாக செயல்பட வணக்கம் மலேசியாவின் செய்தி ஆசிரியர் வேதகுமாரி வெங்கடேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாணவர்களின் அபார பேச்சாற்றல் படைப்பைக் கண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் வெகுவாக ரசித்து ஆரவாரம் செய்தது மாணவர் முழக்கம் போட்டிக்கு சிறப்பம்சமாக இருந்தது.