
ஜோகூர் பாரு, டிசம்பர் 21-ஜோகூர் பாரு, கங்கார் பூலாயில் உள்ள மலையாலும் முருகபெருமான் ஆலயம் டிசம்பர் 15-ஆம் தேதி இடிக்கப்பட்டது குறித்து, ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையை கூலாய் உத்தரா நகராண்மைக் கழகம் மேற்கொண்டது.
பொது விடுமுறை நாளில் நடந்த இந்த இடிப்பு, உள்ளூர் இந்திய சமூகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநில இந்தியர் விவகாரங்களுக்குப் பொறுப்பான தம்மிடம் கூட இது பற்றி முன்கூட்டியே கலந்துபேசப்படாதது குறித்து ரவின் பெருத்த ஏமாற்றம் தெரிவித்தார்.
ஆலயத்தில் உள்ள தெய்வச் சிலைகள் முறையான சடங்குகளுடன் மாற்றப்படாமல் இடிக்கப்பட்டதை தவறானச் செயலாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன், குளுவாங் மற்றும் கெம்பாஸ் பகுதிகளில் கோவில்கள் இடிக்கப்பட்டபோது, தெய்வச் சிலைகள் சமயச் சடங்குகளுடன் மாற்றப்பட்டு, உள்ளூர் மக்களின் ஆலோசனை பெறப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தை ஆட்சிக் குழுக் கூட்டத்தில் எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்ட ரவின், இனி எந்தக் கோவிலோ, வழிபாட்டு இடமோ இடிக்கப்படும்போது முன்கூட்டியே ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
நகராண்மைக் கழகத்தினர், அவசரமாகவும், பல்லின – மத உணர்வுகளை புறக்கணிக்கும் விதமாக செயல்படக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



