
கோலாலம்பூர், பிப்ரவரி-28 – மலேசிய இந்தியர்களின் உரிமைக் குரலாகத் திகழ்வதில் மறைந்த மாமனிதர் துன் ச.சாமிவேலுவுக்கு ஈடாக டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் விளங்குவதாக, பேங்க் ராக்யாட் தலைவர் டத்தோ இர்வான் முபாராக் வருணித்துள்ளார்.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சர் என்ற வகையில் இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றி வரும் சேவை, தமக்கு சாமிவேலுவை நினைவுப்படுத்துவதாக அவர் சொன்னார்.
குறிப்பாக இந்தியத் தொழில்முனைவர்களின் கரங்களை வலுப்படுத்த பேங்க் ராக்யாட் வாயிலாக ரமணன் பல்வேறு முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.
‘மக்களுக்கான வங்கி’ என்ற பேங்க் ராக்யாட்டின் கொள்கையும் அதுவே; இன, நிற பாக்பாடின்றி அனைத்து மக்களையும் கரையேற்ற உதவுவதே பேங்க் ராக்யாட்டின் பணி.
எனவே தான் இந்தியச் சமூகத்துக்கான டத்தோ ஸ்ரீ ரமணன் அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு பேங்க் ராக்யாட்டும் ஒத்துழைத்து வருவதாக அவர் சொன்னார்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அவருடன் நெருங்கிப் பழகிய வரையில், சமூக நலனுக்கான அவரின் போராட்ட குணம் தம்மை வியக்க வைத்ததாக டத்தோ இர்வான் பாராட்டினார்.
அந்தத் தலைமைத்துவப் பண்புகள் அவரை மக்கள் மத்தியில் உயரிய இடத்தில் வைத்துள்ளது.
இது உண்மையிலேயே இந்தியச் சமூகத்துக்கு பெரும் பாக்கியமென டத்தோ இர்வான் வருணித்தார்.
BRIEF-i எனப்படும் இந்தியத் தொழில்முனைவர்களுக்கான பேங்க் ராக்யாட் கடனுதவிக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது டத்தோ இர்வான், ரமணனுக்கு அவ்வாறு புகழாரம் சூட்டினார்
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரமணன், இந்தியச் சமூக மேம்பாட்டுக்கான அரசாங்கத் திட்டங்களுக்கு பொறுப்பேற்றுள்ளார்.
துணையமைச்சரானதிலிருந்து இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஏராளமான திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார்.
வணக்கம் மடானி தொடங்கி, SPUMI இந்தியத் தொழில் முனைவர் மேம்பாட்டுத் திட்டம், பெண் தொழில்முனைவர்களுக்கு அமானா இக்தியார் கீழ் PENN திட்டம், BRIEF-i தொழில்முனைவோர் கடனுதவித் திட்டம் என அப்பட்டியல் நீளுகிறது.