
புத்ராஜெயா, நவம்பர்-1,
ஊடக சுதந்திரத்தையும், செய்தியாளர்களின் முக்கியப் பங்கையும் எப்போதும் மதிப்பது குறித்த தனது கடப்பாட்டை, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT மறுஉறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களின் செய்தி வெளியீட்டுக்கு நன்றி தெரிவித்த KPKT, செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் உரிமையை மதிப்பதாகவும் கூறியது.
அதேசமயம், அதிகாரிகளுக்கும் தங்கள் பதில்களை விளக்குவதற்கான உரிமை இருக்க வேண்டும் என்றும், உண்மைத்தன்மை மற்றும் புரிதலை உறுதிச் செய்ய மரியாதையுடன் செய்யப்படும் திருத்தங்களும் அவசியம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
அண்மையில் ‘2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு’ பிரச்சார இயக்கத்தின் விளம்பர நடவடிக்கைகளில் ஒன்றான ‘I LITE Up’ திட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின் இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்நிகழ்வில் அத்திட்டத்திற்கு ஏன் ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டுமென ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் ங்ஙா கோர் மிங் மிரட்டும் தோரணையில் எதிர்வினை காட்டியதாகக் கூறப்படுகிறது.
இது வைரலானதை அடுத்து, மலேசிய தேசிய செய்தியாளர் சங்கமான NUJM மற்றும் Geram ஆகிய அமைப்புகள் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன.
தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூட, “செய்தியாளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக எத்தகைய கேள்வியையும் கேட்கலாம்” என்று கூறி, திறந்த மனப்பான்மையையும் பரஸ்பர மரியாதையையும் வலியுறுத்தினார்.
இதனிடையே, DSK எனப்படும் Dinamik Sinar Kasih சமூக நலச்சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் வெளியிட்ட அறிக்கையில், “செய்தியாளர்களை மிரட்டுவது அல்லது அவமதிப்பது ஒரு தலைவருக்கு அழகல்ல” என சாடினார்.
“செய்தியாளர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். கேள்வி கேட்பது அவர்களின் பொறுப்பு; ஆனால் அதற்கு மரியாதையுடன் பதிலளிப்பது ஒரு தலைவரின் கடமை. நிதானம், மரியாதை, மற்றும் நாகரிகம் — இவைதான் உண்மையான தலைமைப் பண்புகள்” என அவர் வலியுறுத்தினார்.
செய்தியாளர்களுக்கு எதிரான கடுமையான நடத்தை, ஜனநாயக நம்பிக்கையை பாதிக்கும் என்றும், “உண்மையான வலிமை மரியாதையிலும் நாகரிகத்திலும் தான் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.



